பாட்டோடுதான் நான் பேசுவேன்
– கோவை சூர்யகாந்தன்
நற்றிணை நேயர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். கடந்த 2017-ம் ஆண்டில் நற்றிணை இணையதளத்தின் சேவையினை நான் கேள்விப்பட்டேன். அதன்பிறகே இதில் நிகழ்ச்சிகளைத் தருவதற்கும் முன்வந்தேன். இலக்கியச் சிறகு என்ற தலைப்பிலே ஒவ்வொரு நாளும் நான் வழங்கிய சிற்றுரைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்றளவும் பாட்டோடுதான் நான் பேசுவேன் எனும் தலைப்பில் உங்கள் இதயங்களிலே தென்றலாக வீசிக்கொண்டிருக்கிறேன்.
எனது கல்வித் தகுதி. எம்ஏ, எம்ஏ, பிஎட், எம்ஃபில், பிஎச்டி. அடிப்படையில் நான் படைப்புக் கலைஞன். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என எழுதி கடந்த 45 வருடங்களாக தமிழ்மொழியின் தற்கால இலக்கியத் துறையில் பரிமளித்து வருகின்றேன். இதுவரை எனது 35 நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் அவைகள் பாடநூல்களாக அமைந்து சிறப்புப் பெற்றுள்ளன. ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு மராட்டியம் ஆகிய மொழிகளில் எனது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிக அளவிலே எம்ஃபில் பிஎச்டி ஆய்வாளர்களுக்கு மையப்பொருளாய் எனது படைப்புகள் விளங்கிவருகின்றன. சாதனைகள் புரிந்த பிறமாநில எழுத்தாளர்களோடும் நோபல்பரிசு பெற்ற மேலைநாட்டு எழுத்தாளர்களோடும் என்னையும் எனது படைப்புக்களையும் ஒப்பிட்டு பல்கலைக் கழகங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை அமரர் அகிலன் நினைவு நாவல் விருது, இலக்கியச் சிந்தனை விருது, கோவை பாரதியார் பல்கலைக் கழகம் வழங்கிய தமிழறிஞர் விருது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தரமான இலக்கிய விருதுகளை நான் பெற்றிருக்கிறேன். பத்திரிக்கைத் துறையிலும் வானொலித் துறையிலும் பணியாற்றிய நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி முடித்து ஓய்வுபெற்ற நிலையில் இருக்கிறேன். இப்போதும் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு இலக்கியம் படைக்கும் மக்கள் எழுத்தாளனாக இயங்கி வருகிறேன். நான் எழுதிய பக்திப் பாடல்களும் வானொலிக்கு எழுதிய மெல்லிசைப் பாடல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்று விளங்குகின்றன. சத்தியம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே எனது படைப்புக்களின் உயிர்மூச்சு. தமிழின் சிறப்பை இந்திய தேசத்தையும் தாண்டி உலக இலக்கியத்தில் பதிப்பதற்காக நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.
நான் நற்றிணையில் வழங்கி வந்த இலக்கியச் சிறகு என்ற பகுதியைச் சுவைக்க இங்கே சொடுக்குங்கள்: "இலக்கியச் சிறகு"
தென்றல் இணைய இதழில் என்னைப்பற்றி வந்த கட்டுரையின் தொகுப்பை வாசிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்: "தென்றல்"
என்றும் உங்கள் நண்பன்
சூரியகாந்தன்
11/9 மாரப்ப கவுண்டர் வீதி, ராமசெட்டிப் பாளையம்,
பேரூர் (வழி), கோயம்புத்தூர்641010. அலைபேசி 8300528343
E-mail: [email protected]