நற்றிணையின் வெற்றிப்படிகளில்
அக்டோபர் மாதத்திற்கான பதிவேற்றம் செய்யும் விநாடிகள் கரைந்து கொண்டிருக்கின்றன
0
0
0
0
Days
0
0
Hours
0
0
Minutes
0
0
Seconds

ஆராய்ச்சிமணி

நேயர்கள் மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது நற்றிணையின்
ஆராய்ச்சிமணி

தற்பொழுது உலாவரும் தலைப்பு 

“பெற்றோர் குழந்தைகள் – உறவு”


இது தொடர்பான தங்கள் கருத்துக்களை ஒலிவடிவில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பதிவுசெய்து 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸப் வழியாக அனுப்பலாம்.
(அல்லது)
[email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.
(அல்லது)
8220999799 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
(அல்லது)‘
தங்களது அலைபேசி எண்ணை தெரிவித்தால் நாங்கள் தொடர்பு கொண்டு தாங்கள் கூறும் கருத்துக்களைப் பதிவு  செய்து கொள்வோம்.
தங்கள் கருத்துக்கள் நற்றிணை இணையதளத்தில் (www.natrinai.org) வெளியிடப்படும்.
தங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து கொள்ளலாம்.
அனுபவங்கள் கற்றுத்தரும் பாடம் மகத்தானது. அதை அனைவருக்கும் பயன்படும்படிச் செய்யலாமே..!
நட்புடன்
நற்றிணைக் குழு
################
1) முதல் நேயரின் முத்தான கடிதம்
அன்புள்ள அம்மாவிற்கு தங்கள் அன்பு மகளின் இனிய முத்தங்கள். நற்றிணையின் ஆராய்ச்சி மணி மூலம் எனது மனபாரத்தை இங்கே இறக்கி வைக்கிறேன். 
நான் நலமில்லை. 
நீங்களும் நலமாக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் நாம் அனைவரும் நலமாக இருப்பதாக மற்றவர்களுக்காக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தங்களிடம் நேரில் பேசமுடியாத என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த மடல். 
என்னை ஒரு நல்ல மகளாக வளர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் ஏன் இவ்வளவு துயரப்படுகிறீர்கள்? ஒவ்வொரு தேர்விலும் நானே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும். அனைத்துப் போட்டிகளிலும் நானே முதல் பரிசு வாங்க வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் நான் ஒட்டு மொத்தமாக அடைந்துவிட வேண்டும் என்பதற்காக ஏன் குதிரைப் பந்தய ஓட்டுனரைப் போல் துரத்துகிறீர்கள்? வாட்ஸப் பார்க்கக்கூடாது, ஃபேஸ்புக் அக்கௌண்ட் கூடவே கூடாது. யூட்யூப் பக்கம் தலைவைத்தே படுக்கக் கூடாது. சமூக வலைதளங்கள் அனைத்தும் சதிகாரக் கும்பல்கள் என்று ஏன் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறீர்கள்? அதிலுள்ள பயனுள்ள பக்கங்களை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? கத்தியை பழம் வெட்டவும் பயன்படுத்தலாம். கொலைசெய்யவும் பயன்படுத்தலாம். யாரோ ஒருசிலர் கொலை செய்துவிட்டார்கள் என்பதற்காக என்னை பழம் வெட்ட அனுமதிக்க மறுப்பது சரியா? பொத்திப் பொத்தி வளர்த்த நம் பக்கத்துவீட்டு மல்லிகாக்கா அடுத்த தெரு சுரேஷ்கூட ஓடிப்போய் விட்டாளே என்ன செய்யமுடிந்தது அவர்களால். நம்பிக்கைதான் அம்மா வாழ்க்கை. என்னை நம்புங்கள். இனிமேலாவது என்னை சுயமாய் சிந்திக்கவிடுங்கள். உங்களின் பதிலுக்காகக் காத்திருக்கும் உங்கள் அன்பு மகள்
சந்தியா
$
2) மகளுக்கு அம்மாவின் பதில் கடிதம்
பிரியமுள்ள சந்தியாவிற்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாத அம்மாவின் கண்ணீர் முத்தங்கள். 

உன் கடிதம் கண்டு வெகுவாகவே வியந்து போனேன். இவ்வளவு அழகாக உனது எண்ணங்களை எழுத்தாக்கும் திறமை உனக்குள் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். இதுநாள்வரை நான்கு சுவற்றுக்குள் இருந்த நம்வீட்டு விஷயத்தை ஊரறிய போட்டுடைப்பாய் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நற்றிணையின் ஆராய்ச்சிமணி மூலம் கேள்விக் கணைகளைத் தொடுத்திருப்பதால் அதன் மூலமாகவே எனது நிலையையும் விளக்குகிறேன்.  

மகளை வைத்திருக்கும் ஒவ்வொரு அம்மாவிற்கும் ஒரு அடைமொழி சொல்வார்கள், நீயும் கேள்விப்பட்டிருப்பாய். நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு -என்று சொல்வார்கள். வெறும் வார்த்தைகளாகப் பார்ப்பவர்களுக்கு அது வெறும் வார்த்தைதான். ஆனால் அந்த அம்மாக்களுக்குத்தான் தெரியும் அந்த வார்த்தையின் உண்மையான வலியும், எரிச்சலும். பொதுவாகவே எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலேயே நிகழ்காலத்தில் நிம்மதியில்லாமல் இருப்பவர்கள்தான் பெரும்பாலான பெண்கள். நானும் அதில் ஒருத்திதான் என்பதை நீ அதிகப்படியாகவே அறிவாய். என்னதான் நடந்துவிடும் பார்ப்போம் -என்ற அசட்டுத் தைரியம் எனக்கில்லை. வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும். விலங்குகள் வருவதற்குள் வேலிபோட வேண்டும் என்ற எச்சரிக்கையோடு தூக்கத்திலும் விழித்திருக்கிறேன் மகளே. 
உன் சந்தோஷத்திற்காக என்னையேகூட நான் இழக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு இம்மியளவும் உன்னை இழக்க நான் சம்மதிக்கமாட்டேன். இளங்கன்று பயமறியாது என்பது இளங்கன்றுகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒத்துக்கொள்ளவதில்லை. 
அனைத்திலும் முதலிடத்தில் வரவேண்டும் என்பது நான் பெருமைப் பட்டுக் கொள்வதற்காக மட்டுமல்ல மகளே, என் அம்மாவால் எனக்குச்  செய்ய முடியாத உதவிகளை உனக்குச் செய்ய வேண்டும் என்றுதான் உன்னோடு ஓடிவருகிறேன். காலங்கள் போனால் திரும்பாது அந்தந்தப் பருவங்களில் அதைஅதை செய்ய வேண்டும். இப்போது முயற்சித்தாலும் என்னால் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. ஆனால் பள்ளியில் படிக்கும் நீயும் இதுபோல் பிற்காலத்தில் வருத்தப்படக் கூடாது என்பதற்காகத்தான் உன்னை முதலிடத்தில் ஏற்றிவிட ஆசைப்படுகிறேன். உன்னால் முடியும் சந்தியா. உன்னால் மட்டுமல்ல முயற்சிக்கும் அனைவராலும் வர முடியும் அதில் திறமையை வளர்த்துக் கொண்டவர்கள் முதலிடத்தில் ஜொலிக்கிறார்கள். முதலிடத்திற்கு உன்னை ஊக்குவித்தால் மூன்றாவது இடத்தையாவது தொட்டுவிட மாட்டாயா என்ற ஆதங்கத்தில்தான் உன்னை ஊக்குவிக்கிறேன். ஆனால் பெரும்பாலான முதலிடங்களை நீ தொட்டுவிடும்போது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கிறேன். 
நீ சாதிக்கப் பிறந்தவள் சந்தியா. எந்த சாக்கடைக்குள்ளும் சிக்கிவிடக் கூடாது. நான் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் எனக்கு உலக அனுபவம் இல்லை என்ற உனது வார்த்தைகள் உண்மைதான். தொலைக்காட்சியும் நியூஸ் பேப்பரும்தான் உலகத்தின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் சம்பவங்களையும் அள்ளி அள்ளி கொட்டுகின்றனவே. போதாக் குறைக்கு வேலைக்குச் செல்லும் உன் ரம்யாசித்தி அவளது அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும் இளைஞர்களும் இளைஞிகளும் அடிக்கும் கொட்டத்தையும் விலாவாரியாகச் சொல்கிறாளே. 

நீ நல்லவள் சந்தியா. உன்னைக் கெட்டவளாக்குவதற்கான வாய்ப்புகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. கலம் பாலுக்கு துளி விஷம் போதும். ஒரு காட்டை அழிக்க ஒரு தீக்குச்சி போதும். உன்னை ஒட்டுமொத்தமாய் அழிக்க ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் போதும். ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் அனைத்தும் என் மடியிலுள்ள நெருப்பில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. என்னால் தாங்க முடியவில்லை சந்தியா. இறுதியாக ஒன்று சொல்கிறேன் மகளே. முற்போக்கு என்று சொல்லி பாதாளத்தில் வீழ்ந்துவிடாதே. பழமையாக இருந்தாலும் பரவாயில்லை. எச்சரிக்கையோடு இருந்து வாழ்க்கையில் ஜெயித்துவிடு.

கண்ணீர் முத்தங்களுடன்
அம்மா கோதைநாயகி
$
3) அம்மாவிற்கு சந்தியாவின் நம்பிக்கைக் கடிதம்

அன்புள்ள அம்மாவிற்கு மீண்டும் சந்தியாவின் அன்பு முத்தங்கள். எனது கடிதத்தை முழுவதுமாகப் படித்ததற்கு முதற்கண் எனது நன்றிகள். நற்றிணை ஆராய்ச்சி மணியிலேயே பதில்கடிதம் அனுப்பியதற்கு இரண்டாவது நன்றிகள். நான்கு சுவருக்குள் இருக்க வேண்டிய விஷயத்தை நாடறியச் செய்துவிட்டேன் என்று  ஆதங்கப்பட்டிருந்தீர்கள். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன் அம்மா. ஒவ்வொரு நான்கு சுவருக்குள்ளும் இதுதானம்மா நடந்து கொண்டிருக்கிறது. இது ஊரறிந்த ரகசியம்தான். 

புண்ணைக் கீறிவிட்டு மருந்திட்டால் நிச்சயம் ஆறிவிடும். உள்ளே புரையோடிக் கொண்டிருக்கும்போது வெளியே மருந்திடுவதில் என்ன பயன்? அதனால்தான் ஊரறியக் கீறிவிட்டேன். இது நம்வீட்டுப் புண் மட்டுமல்ல. சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கிற புண். இப்பொழுதாவது முழுதுமாக வைத்தியம் பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் களம் இறங்கியிருக்கிறேன்.

 என்னுடைய வாழ்க்கையை  நான் வாழ்வதைவிட நீங்கள்தானம்மா அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். என்ன உடை அணியவேண்டும்? யாரோடு நட்புக் கொள்ள வேண்டும்? என்ன உணவு உண்ண வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எதிர்காலத்தில் நான் என்ன தொழில் செய்யவேண்டும்? அத்தனையும் நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். அப்பா ஏன் அப்பாவாக இல்லாமல் எஜமானராகவே இருக்கிறார்? ஒரு நல்ல வழிகாட்டியாக இல்லாமல் ஏன் எப்பொழுதும் ஒரு மேய்ப்பராகவே இருக்கிறார்? அவர் சொல்வதெல்லாம் உங்களுக்கு வேதவாக்குதான். ஆனால் என்னை ஏன் சுயமாக சிந்திக்கவிட மறுக்கிறீர்கள்.
 மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தீர்கள். இதுபோன்ற வார்த்தைகளுக்குள்தான் நீங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கைதானே அம்மா வாழ்க்கை. என்மகள் சந்தியா எந்த நிலையிலும்  திடமாக இருப்பாள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை. திடமாக இருக்குமளவிற்கு எனக்குள் தன்னம்பிக்கையையும் வளர்த்துவிடவில்லை. 
ஒரு ’ஹேர் ப்பின் வாங்குவதானால்கூட உங்களிடம் சொல்லித்தான் வாங்கவேண்டும் எனுமளவிக்கு ஒரு சாறுண்ணியாகவே என்னை வளர்த்துவிட்டீர்கள். பிறந்தவுடன் நான் எழுந்து நடந்துவிடவில்லையே. சைக்கிளில் ஏறியவுடன் உடனடியாய் ஓட்டிவிடவில்லையே. எத்தனையோமுறை விழுந்து எழுந்துதானே நடந்தேன். சைக்கிள் ஓட்டினேன். அனுபவம்தான் அம்மா உலகத்திலேயே மிகச்சிறந்த ஆசிரியன். நீங்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களையெல்லாம் எனக்குள் திணிக்க முயற்சிக்காதீர்கள். நானும் எனது வாழ்க்கையை  வாழ்ந்து பார்க்க அனுமதியுங்கள். 
ஆண் நண்பர்களுடன் பழகுபவர்கள் எல்லாம் வழிமாறுகிறார்கள் என்பது உங்களது அதீத கற்பனை. ஆனால் நிஜத்தைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். எனக்குத் தெரிந்து கோ-எட்டில் படிக்காதவர்கள்தான் பெரும்பாலும் காதல்வலையில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். மறைத்து வைக்கப்பட்ட விஷயங்கள்தான் திடீரென ஒருநாள் பூதாகரமாக வெடிக்கின்றன. வெளிப்படையானவர்களிடம் மனதில் எந்த ஒரு சங்கோஜமும் இருப்பதில்லை. டிவி சீரியல்களையே பார்த்துப் பார்த்து எதிர்மறை எண்ணங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் அத்தனை அம்மாக்களும் இப்படித்தான் இருக்கிறீர்கள். உங்களைத் திருத்திவிட முயற்சிப்பதிலும் உங்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதற்காக போராடுவதிலுமே எங்களது நிகழ்காலம் வீணாகிக் கொண்டிருக்கிறதம்மா. 
பள்ளியில் படிக்கும்போதே ஒரு உளவாளியாக என்னை நோட்டம் விடும் நீங்கள் நான் கல்லூரிக்குச் செல்லும்போது என்னவெல்லாம் செய்யப் போகின்றீர்களோ யாமறியேன். அதற்குள் நீங்கள் என்னை புரிந்து கொண்டுவிட்டால் என் கல்லூரி வாழ்க்கை எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இல்லையென்றால் உங்களுக்கு பயந்து பயந்தே எனது எண்ணச் சிறகுகளை நான் சுருக்கிக் கொள்ள வேண்டும். அல்லது உங்களுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவேனும் எனக்குப் பிடித்தமாதிரி எனது எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும். இந்த இரண்டில் எதை நான் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது உங்கள் கையில்தானம்மா இருக்கிறது. 
நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் வாழ்க்கையின் உச்சத்திற்கே செல்கின்றார்கள். அவநம்பிக்கையை அணிந்து கொண்டவர்கள் தங்கள் நிம்மதியை இழப்பதோடு தன்னைச் சார்ந்தவர்களின் வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள். என்னை நம்புவீர்கள். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை முடிக்கிறேனம்மா. 
உன்னை நம்புகிறேன் சந்தியா. உன் வாழ்க்கையை நீவாழ அனுமதிக்கிறேன் சந்தியா என்று பதில்கடிதம் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் உங்களின் அன்பு மகள்
-சந்தியா
பின்குறிப்பு: எனது கருத்துக்களை ஆதரிப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் தங்கள் கருத்துக்களை நற்றிணையின் ஆராய்ச்சி மணிக்கு 8220999799 என்ற எண்ணிற்கு வாட்ஸப்பாகவோ அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம்.

R.MARAN


8th Std
P.U.M.SCHOOL Muthalaipatty Namakkal
SPECIAL GIFT